குழாய் இணைக்கும் பணியால் மேலும் 2 நாட்களுக்கு - உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் :

தொடர் மழையால் குழாய் இணைப்பு வழங்கும் பணியில்தாமதம் ஏற்பட்டுள்ளதால், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மேலும் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பூலாங்கிணறு, கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் தளி வாய்க்காலை நீர் ஆதாரமாகக்கொண்டு, ரூ.88.75 கோடி மதிப்பில்செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குழாய் இணைப்பு வழங்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மழையால் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் தாமதமானதால் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 3 நாட்கள் குடிநீர் இன்றி பல்வேறு கிராம மக்கள் அவதிக்குள்ளான நிலையில், இந்த அறிவிப்பு பொதுமக்களை வேதனையடைய வைத்துள்ளது. எனவே குழாய் இணைப்பு வழங்கும் பணியை துரிதப்படுத்தி, மேலும் காலதாமதம் இன்றி குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்