தொடர் மழையால் பாழாகிப்போன பயிர்கள் - நிரந்தர தீர்வுக்காக ஏங்கி நிற்கும் புதுச்சேரி விவசாயிகள் :

By செ.ஞானபிரகாஷ்

தொடர் கனமழையால் கடும் பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர் புதுச்சேரி சுற்று வட்டார விவசாயிகள். வடிகால் வசதி இல்லாதது, பாதிப்பு குறித்து கணக்கிடாதது, சரியான தொழில்நுட்ப வழிகாட்டுதல் இல்லாதது என பல் வேறு இன்னல்களை இந்த கனமழை காலத் தில் சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரி விக்கின்றனர்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக மழை பெய்தது. இந்த தொடர் கனமழையால் விவசாயத்தில் ஈடுபட்டோர் கடும் பாதிப்பில் உள்ளனர்.

கனமழை விட்டு 10 நாட்களை கடந்தாலும், இடை இடையே பெய்து வரும் மழையால் வெள்ள நீர் வடியாமல் விளை நிலங்களில் தேங்கி நிற்கின்றன. காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, சந்தை புதுக்குப்பம், லிங்காரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு பயிர்கள் தற்போதும் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன.

இந்த பாதிப்பு குறித்து சந்தைபுதுகுப்பம் கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "தேங்கியுள்ள மழைநீரால் விவசாய விளை நிலங்கள் ஏரி போல் காட்சியளிக்கிறது. 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் முழுவதுமாக அழுகி விட்டது. இதேபோல் கதிர் வரும் தருவாயில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி விட்டன. உரிய வடிகால் இல்லாததால் விளை நிலத்தில் நீர் தேங்கி நிற்கிறது. உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு தர அதிகாரிகள் இங்கு வருவதில்லை" என்றனர்.

காட்டேரிக்குப்பம் விவசாயிகள் தரப்பில் கூறுகையில், " காட்டேரிக்குப்பம் ஏரியின் மதகுகள் உயரமாக இருப்பதால் விளை நிலங்களில் உள்ள நீர் வடியாத நிலை உள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இச்சிக்கல் நீடிக்கிறது. ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர். பாதிப்பு குறித்து எந்த அதிகாரியும் வந்து ஆய்வு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இப்பகுதி விவசாயிகளும் வைக் கின்றனர்.

இதே போல் மண்ணாடிப்பட்டு, குமாரப் பாளையம், காட்டேரிக்குப்பம், வம்புபட்டு, சோம் பட்டு ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பூச்செடிகளின் வேர் அழுகி, பூக்கள் அனைத்தும் கருகி விட்டன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டு, நஷ்டமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க தெரி விக்கின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், “மழை பெய்தும் பலனில்லாமல் போய்விட்டது. தண்ணீர் வடியாததால் வேர்கள் அழுகி விட்டன. கஷ்டப்பட்டும் பலன் இல்லாமல் போய்விட்டது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நேரில் வந்து பார்க்கவில்லை. கஷ்டத்தை அனுபவிக்கும் விவசாயிகளை வேளாண்துறை மனிதர்களாக நினைத்து பார்க்க வேண்டும். உண்மையில் வேளாண்துறை புதுச்சேரியில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. நஷ்டஈடு கிடைக்கவாவது வழி செய்தால் தொடர்ந்து நாங்கள் பயிரிட முடியும்” என்கின்றனர்.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆர்வமுடன் பயிர் செய்த பலவிததோட்டக்கலை பயிர்களும் தண்ணீர் தேங்கிய தால் அழுகியுள்ளதாக விவசாயிகள் பரிதாபமாக குறிப்பிடுகின்றனர்.

மொத்தத்தில் சரியான வடிகால் வசதி இல்லை;பாதிப்பு நடந்தால் வந்து பார்ப்பதே இல்லை வேளாண் துறையில் இருந்து உரிய வழிகாட் டுதல் எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த அதே அவலம் தற்போதும் தொடர்கிறது என்று புதுச்சேரி சுற்றுவட்டார விவசாயி கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்