திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 4 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி,இந்த ஆண்டு அதிகமான மழை பொழிவால் 6 ஆயிரம் ஹெக் டேராக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10,000 ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி போதிய மழை இன்றி படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 4 ஆயிரம் ஹெக்டேர் ஆனது. பலர் மக்காச்சோளம் சாகுபடிக்கு மாறிவிட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மாவட்டத்தில் 30 சதவீதம் அதிக மழை பொழிவு இருந்தது. இதனால் 80 சதவீத நீர்நிலைகள் நிரம்பின. விவசாயக் கிணறுகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து இறவை பாசனமாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயி கள் கிணறுகளில் நீர் இருப்பதால் நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனர்.
தற்போது வரை மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரம் வரை நெல்சாகுபடி நடக்கும் என்பதால் இந்த ஆண்டு 11 ஆயிரம் ஹெக்டேர் வரை நெல் சாகுபடிக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்கள் பயிரிட்டு வந்த விவசாயிகள் நெல் சாகுபடிக்கு மாறியதால் இந்த ஆண்டு சிறுதானிய சாகுபடி பரப்பு குறையும்.
நெல் சாகுபடியை பயிர் காப்பீடு செய்ய 2022 ஜனவரி 31-ம் தேதி இறுதிநாள் என்பதால், தற்போது பயிரிட்டுள்ள பிற பயிர்களை அறுவடை செய்தபிறகு நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 9 ஆயிரம் ஹெக் டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணியிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் கடந்து அதிக பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago