5 மாவட்டங்களில் ரூ.400 கோடி மோசடி - ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் காவல் ஆய்வாளரை சேர்க்க உத்தரவு :

பெருந்துறையில் கே.எம்.சாமி குரூப் ஆப் பிஆர்ஐ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ரூ.400 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தர்மராஜ், செல்வி உட்பட பலர் மீது காரைக்குடியைச் சேர்ந்த டி.பானு சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதில் 28 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் தர்மராஜ், செல்வி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தர்மராஜ், செல்வி, ரபியதுல்பதவியா சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தனலெட்சுமி, லெட்சுமணன் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றனர். இந்த 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் பானு மனு தாக்கல் செய்தார். அதில், தற்போது விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கும் எனத்தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளரை எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 7-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE