கிரானைட் கழிவுகளில் அலங்காரப் பொருட்கள் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

பர்கூரில் கிரானைட் கழிவுகளில் இருந்து அலங்காரப் பொருட்கள் தயாரிக்க, கிராமப்புற பெண்களுக்கு தனித்திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கிரானைட்ஸ் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் கே.மகேஷ், மாவட்ட ஆட்சியருக்குஅனுப்பிள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பர்கூர், ஜெகதேவி சுற்றுவட்டாரங்களில் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூலம் கிரானைட் பலகைகள் மெருகூட்டும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கிரானைட் கழிவுகளில் இருந்து, அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிக்கலாம். இதற்கான தனித்திறன் பயிற்சியை பர்கூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக பர்கூர் சிட்கோவில் சமுதாய பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காலி இடத்தை வழங்கினால் எங்களது அமைப்பு சார்பில் பயிற்சி மையத்துக்கான கட்டிடம் உருவாக்கப்பட்டு, கிராமப்புற பெண்களுக்கு ஊக்கத் தொகையுடன் தனித்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம்.

மேலும், எங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், சிட்கோ தொழில் மனைகளின் விலையை வெகுவாக குறைத்துள்ளார். தமிழக அரசின் உத்தரவால் ஊத்தங்கரை தொழிற்பேட்டையில், 75 சதவீதமும், பர்கூர் தொழிற்பேட்டையில், 50 சதவீதமும் மனைவிலை குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவால் முடங்கியிருந்த சிறு, குறு கிரானைட் பலகைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்