நம் நாட்டுக்கே அடையாளமாக திகழ்பவர் தமிழக முதல்வர் : அரசு நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஸ்டாலின் நம் நாட்டுக்கே அடையாளமாக திகழ்கிறார் என தருமபுரி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பேசினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கடத்தூர் ஆகிய இடங்களில் நேற்றுசிறப்பு மக்கள் குறை தீர்க்கும்முகாம்கள் நடந்தன. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் நடந்த இம்முகாம்களில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பேசியது:

கடந்த சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம். வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஸ்டாலின் தெரிவித்தார். தெரிவித்ததை போலவே ஆட்சி அமைந்ததும், பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் அடங்கிய பெட்டிகளை திறந்து தகுதியான மனுக்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு ஏற்படுத்தினார். இவ்வாறு லட்சக்கணக்கான கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்திய ஆட்சி இந்த ஆட்சி. தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்கள் பெற்று வருகிறோம். இம்முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கான தீர்வு முதலமைச்சர் கைகளாலேயே விரைவில் வழங்கப்படும். மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நம் முதல்வர் நாட்டுக்கே அடையாளமாக இருக்கிறார். அவர் ஆட்சியின் கீழ் தினந்தோறும் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த அரசிடம் கேட்டால் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். மக்களுக்கும், அரசுக்கும் இடையே 10 ஆண்டு காலம் இடைவெளி இருந்தது. அந்த சூழல் தற்போது மாறியுள்ளது. இந்த ஆட்சியில் தருமபுரி மாவட்டத்துக்கு நல்ல ஒரு விடிவு காலம் ஏற்படும். உங்களின் நீண்டகால கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது. மாவட்ட மக்களின் புளூரைடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தவர் நம் முதல்வர். அதேபோல, ஒகேனக்கல் காவிரியாற்றின் உபரிநீரை விவசாய தேவைகளுக்கு ஏரிகளுக்கு வழங்க தேவையான திட்டம் விரைவில் நிறைவேறும். அதன் பின்னர் தருமபுரி பசுமை நிறைந்த மாவட்டமாக மாறிவிடும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலருமான மருத்துவர் வைத்திலிங்கம், அரூர் கோட்டாட்சியர் முத்தையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்