சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவில் நேற்று கருட தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயில் மார்கழி திருவிழாகடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் தாணுமாலய சுவாமி வாகன பவனி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் நாள் விழாவான நேற்று அதிகாலை பஞ்சமூர்த்தி தரிசனம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, தாணுமாலய சுவாமி, பெருமாள், அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், 3 சுவாமிகளும் ரதவீதி சுற்றி வலம் வந்து வீரமார்த்தாண்ட விநாயகர் கோயிலுக்கு முன்பு வந்தபோது, வானத்தில் கருடன் வலம் வந்தது. அப்போது, கோயில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்கள் கருடனை வழிபட்டனர்.
பின்னர், பூங்கோயில் வாகனத்தில் தாணுமாலய சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அய்யன் மடத்தில் மண்டகப்படியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான மார்கழி தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அன்று, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து, சுசீந்திரத்துக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago