காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
திருமலைராயன்பட்டினம் மேலவாஞ்சூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, உட்புற சாலைகள் மிகவும் சேதமடைந்து மேடு பள்ளங்களாக காணப்படுகின்றன. இதனால், இந்த சாலை வழியாக செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலவாஞ்சூரில் உள்ள கஞ்சா தெரு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேலவாஞ்சூர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலாளர் எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.தமிழ்மணி, எஸ்.கே.தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் அன்சாரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
தொடர்ந்து அப்பகுதியில் பள்ளங்கள் நிறைந்த சாலையில் நாற்று நட பேரணியாக சென்றனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து நாற்று நடும் போராட்டத்தைக் கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago