வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.93 லட்சம் நிதி திரட்டி - தார் சாலை அமைக்கும் கிராம இளைஞர்கள் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் அருகே குமட்டித்திடல் ஊராட்சி புத்தகரம் கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவில் 3 கி.மீ தொலைவுள்ள தார் சாலை கடந்த 15 ஆண்டுகளாக சேதமடைந்து, சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இதுகுறித்து அரசுக்கும், உள்ளாட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி சாலை புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சாலை மேலும் சேதமடைந்து வந்ததைக் கண்ட அந்த ஊர் இளைஞர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டி, புதிதாக தார் சாலை அமைக்க முடிவு செய்தனர். அதற்காக, ‘புத்தகரம் 360' என்ற வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்து, நிதி திரட்டினர். இதில் கிடைத்த ரூ.1.93 லட்சம் நிதியைக் கொண்டு, அந்தச் சாலையில் 650 மீட்டர் தொலைவுக்கு புதிதாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து புத்தகரம் இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் பாலமுருகன் கூறியது:

ஏற்கெனவே, எங்கள் ஊரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனுக்கு புற்று நோய் பாதித்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் ரூ.1.20 லட்சம் நிதி திரட்டி சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது, இந்த சாலை அமைப்பதற்கும் புத்தகரத்தைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் இருந்து தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இதன்மூலம், ஊரில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளதுடன், ஊருக்கு தேவையான ஆக்கப்பூர்வ பணிகளை எவ்வித பேதமுமின்றி செய்ய முடிகிறது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார். எங்களின் இந்தப் பணியை பார்த்து, எஞ்சியுள்ள சாலைப் பணியை முடிக்க மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்