பொள்ளாச்சி நேதாஜி சாலை அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பிளஸ் 2 மாணவிகள் சிலருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையறிந்த பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரோனா பாதிப்பு குறித்து பெற்றோருக்கு முறைப்படி தகவல் தெரிவிப்பதில்லை என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
அவர்களுக்கு பதிலளித்த தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பில் யாருக்காவது கரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுவதாகவும், வகுப்பறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். திடீரென தலைமை ஆசிரியர் மயங்கிவிழுந்தார். அருகில் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, மாவட்ட கல்விஅலுவலர் ஆர். ராஜசேகரன் கூறும்போது, ‘‘பள்ளியில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெற்றோர் அச்சம் அடைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரு தினங்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி முழுவதையும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துவதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago