கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி - சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது :

By செய்திப்பிரிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கோவை மாவட்டப் பிரிவின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல ரூ.3,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனத்துக்கு ரூ.5,000 வழங்கவேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சிகளில் தனிக்குழு அமைத்து அரசாணைப்படி 4 மணி நேர வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசிவழங்க வேண்டும், வீடு வழங்க வேண்டும், ஊனமுற்றோர் அடையாள சான்று இல்லாதவர்களுக்கு கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி அடையாள சான்று வழங்கவேண்டும், பேருந்து பயண உதவியாளர் மற்றும் ரயில் பயண சலுகைசான்றிதழ்களை உள்ளூரில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தலைமை வகித்து, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.புனிதா கூறும்போது, “கோவை மாவட்டத்தில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா ளிகள் உள்ளனர். ஆனால், மாவட்டநிர்வாகத்தினர் 39 ஆயிரம் பேர்மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். எங்களின் கோரிக்கைகள் தொடர்பான கணக்கெடுப்பின் நோக்கம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது’’ என்றார். இதைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் குமரன் சிலை முன்புநடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் துணைத் தலைவர் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் பொருளாளர் காளியப்பன் உள்பட 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர். இரு இடங்களில் நடந்த மறியலில் 18 பெண்கள் உட்பட 52 பேர்கைது செய்யப்பட்டனர்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவர் குருசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

51 பெண்கள் உட்பட 126 பேர் கலந்து கொண்டனர். போராட்டத் தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக் கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்