இரவு நேர நேரடி பேருந்துகளை இயக்க கோரிக்கை : சுற்றுப்புற கிராம மக்கள் குற்றச்சாட்டு

கல்பாக்கம் - செங்கல்பட்டு இடையே இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கல்பாக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 108, 157, 212ஜி, டி18 ஆகிய பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக கல்பாக்கத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டுக்கும் மற்றும் செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் பகுதிக்கும் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மக்கள் கூறும்போது, "செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கத்துக்கு இரவு 7மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாததால், திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் சென்று ஈசிஆர் சாலையில் வரும் பேருந்துகள் மூலம் 45 கிமீ தொலைவு சுற்றிக்கொண்டு கல்பாக்கம் செல்லும் நிலை உள்ளது. மேலும், ஈசிஆர் சாலையில் வரும் அனைத்து பேருந்துகள் கல்பாக்கம் பகுதியில் நிறுத்தி இயக்கப்படுவதில்லை. எனவே, இரவு நேரங்களில் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து, கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் கூறும்போது, "கல்பாக்கத்திலிருந்து இரவு 7:10, 7:35, 8:15 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இங்கிருந்து வேலூருக்கு இரவு 9:20-க்குஇயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குவேலூர் பணிமனை நிர்வாகத்தைதான் அணுக வேண்டும்" என்றனர்.

செங்கல்பட்டு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் சுகுமார் கூறும்போது, "கல்பாக்கம் மறறும் செங்கல்பட்டு இடையே இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனக்கூற முடியாது. இருப்பினும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE