நாமக்கல் அருகே ஆவல்நாயக்கன் பட்டி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ பெ. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மேலும், முகாம்களில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணிகளுக்காக கால்நடை பராமரிப்புத்துறை பணியாளர்களைக் கொண்டு 105 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 129 நபர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடவுள்ளனர், என்றார்.
தொடர்ந்து கால்நடைகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு கேடயம், கன்றுகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு பரிசு மற்றும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
மேலும், கால்நடை தீவனப்புல் கண்காட்சியையும் அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் வி.பி.பொன்னுவேல், நாமக்கல் மாவட்ட ஆவின் பொது மேலாளர் பி.பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago