தகுதிச்சான்று பெறாமல் இயக்கினால் பள்ளி வாகனங்கள் பறிமுதல் : வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தகுதிச்சான்று பெறாமல் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜன.3-ம் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஆய்வு பணி கோபி ஒத்தக்குதிரையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இயக்கப்படும் 122 வாகனங்களை, கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் முத்துசாமி, கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது வாகனங்களில் அரசு விதிமுறைகளின்படி, தீயணைப்பு கருவி, அவசரகால வழி, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறைபாடுகள் உள்ள வாகனங்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள், சரி செய்த பின்னர் மீண்டும் காட்டி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஓட்டுநர்களிடம் வட்டார போக்குவரத்து அலு வலர் முனுசாமி பேசும்போது, உங்களை நம்பி பெற்றோர் குழந்தைகளை அனுப்பி வைத்து உள்ளனர் என்ற பொறுப்புணர்வோடு வாகனங்களை இயக்க வேண்டும்.

வாகனங்களில் பழுது இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். தகுதிச்சான்று பெறாமல் மாணவர்களை அழைத்து செல்ல வாகனங்களை பயன்படுத்தினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்