சேலம், நாமக்கல், ஈரோட்டில் - 5,437 மகளிர் குழுக்களுக்கு ரூ.268.91 கோடி கடனுதவி :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நடந்த விழாவில் 5,437 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.268.91 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பட்டாபிராம் பகுதியில் நேற்று (14-ம் தேதி) மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வங்கிக் கடன்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதே நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் தலைமையில் விழா நடைபெற்றன.

சேலம் தொங்கும் பூங்கா அரங்கில் நடைபெற்ற விழாவின்போது, முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மேலும், ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,137 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 27,970 உறுப்பினர்களுக்கு ரூ.104.19 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் ரூ.97.57 கோடி

நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில ஊரகம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 1,802 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97 கோடியே 57 லட்சம் வங்கிக்கடனுக்கான காசோலையை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு. வடிவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் 1,498 குழு

ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நேற்று நடந்தது. விழாவில், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், திருமகன் ஈவெரா, சி.சரஸ்வதி, தமிழ்நாடு கேபிள் டிவி நிருவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 1498 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.67.15 கோடி மதிப்பிலான வங்கிக்கடன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டிலேயே முதல்முறையாக 1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும். அதேபோல், தேவைக்கு ஏற்ப புதிய குடியிருப்புகளை கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்