தஞ்சாவூரில் கோயில் குளத்தில் 75 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிப்பு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் ஆப்ரகாம் பண்டிதர் சாலை அருகே உள்ள மேட்டு எல்லையம்மன் கோயிலுக்கு சொந்தமான குளம் அந்த பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.

காலப்போக்கில் இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதியில் 2 வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு, 24-2-2021-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறும் அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர்கள், அவற்றை அகற்றிக்கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் மூலம் கோயில் குளத்தில் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்