அறிவியல் இயக்க 15-ம் ஆண்டு மாவட்ட மாநாடு :

நாகப்பட்டினம்: தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட 15-ம் ஆண்டு மாநாடு நாகை இலாஹிய்யா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஆரிப் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவரும், தேசிய நல்லாசிரியருமான ரா.பாலு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் 2019-21-ம் ஆண்டுக்கான செயல் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் கண்ணன் நிதி அறிக்கையையும் வாசித்தனர். கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி மாநாட்டை தொடங்கி வைத்தார். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.மதிவாணன், முத்தமிழ் இலக்கிய மன்ற நாகை நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாகை தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், தன்னார்வ ரத்த தான செயல்பாட்டாளருமான ராஜராஜன் சமூக மாற்றத்தில் தன்னார்வலர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் கு.வ.மனத்துணை நாதன், குழந்தைகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான சுக்கா புக்கா முக்கா என்ற நூலை அறிமுகப்படுத்தி பேசினார். சிறுகதை எழுதிய குழந்தைகளில் அனீஸ் குமார், சரவண பாண்டியன் ஆகிய இரு குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE