மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் திருவாரூர், கோட்டூர், நாகப்பட்டினம், கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் திருவாரூர் நகர, ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் டி.தியாகராஜன், நகர பொறுப்பாளர் கே.பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், திருவாரூர் வட்டாட்சியரிடம் தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டிய மனுவை அளித்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் அறிவுடைநம்பி, ஒன்றியச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் சார்பில், ஒன்றியக் குழு உறுப்பினர் சரபோஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago