கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் ஒப்படைக்கப்படும் பல்வேறு கோயில்களின் ஐம்பொன் சிலைகள், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் செயல்படும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு பகலாக கோயில் ஊழியர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து அறிவதற்காகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகளில் 6 சிலைகள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிலை கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ் சந்திரகபூர் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது.
சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் துறையை பலப்படுத்த கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும், உலோக சிலைகள் பாதுகாப்பு மையங்கள் தமிழகத்தில் மேலும் சில இடங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago