தேசிய திறனறித் தேர்வு புத்தகங்களை தமிழில் வழங்க நடவடிக்கை : மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தேசிய திறனறித் தேர்வுக்கான புத்தகங்களை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இதுவரை பணி வழங்கப்படாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் நிலை குறித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் குறித்தும் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து துறைரீதியாக கொண்டு செல்லப்பட்டு, முதன்மைச் செயலாளரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளதால், இதுதொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி, ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

கரோனா காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி தனியார் கல்வி நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், 50 ஆயிரம் மனுக்கள் வரை வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம்.

இல்லம் தேடி கல்வித் திட்டம் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.

மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வுக்கான புத்தகங்களை தமிழில் வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தமிழக மக்க ளுக்கு தேவை என்பதால், திறனறித் தேர்வுக்கான புத்தகங்களை தமிழில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்