தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக - ஒருநபர் ஆணையத்தில் 3 எஸ்.பி.க்கள் சாட்சியம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத்தில் நேற்று காவல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் 33-வது கட்ட விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் மூன்று பேர்ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இரண்டாம் நாளான நேற்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜராஜன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றும் டிஎஸ்பி பாலச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் ஒருநபர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம்அளித்தனர். அவர்களது வாக்குமூலங்களை ஆணைய அதிகாரிகள் பதிவு செய்தனர். இன்று (டிச.15) தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எஸ்பி அருணா பாலகோபாலன் ஒருநபர் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE