தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களில் வீடு புகுந்து : நகை திருடிய 4 பேர் கைது ரூ.14 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் நகைகள் மீட்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி பகுதிகளில் வீடு புகுந்து நகைகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பிலான 44 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் மு.அந்தோணிராஜ் (53). ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் இவரது வீட்டு பின்பக்க கதவை உடைத்து கடந்த 08.10.2021 அன்று 45 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஏஎஸ்பி சந்தீஸ்மேற்பார்வையில், சிப்காட் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீட்டில் கிடைத்த கைரேகை பதிவுகள் மூலம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் மாவட்டம் அம்மன் நகரை சேர்ந்த ஜே.மனோஜ் ராஜ் (35), கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த க.கார்த்திக்ராஜா (24), அவரது சகோதரர் க.ராஜாராம் (26), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சூர்யாநகரை சேர்ந்த வி.திலீப் திவாகர் (26) என்பதும், அவர்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையிலிருந்து காவலில் எடுத்து அவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நான்கு பேரும் அந்தோணிராஜ் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 44 பவுன் நகைகளை மீட்டனர். அவர்கள் 4 பேர் மீதும் காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி, கோவை, புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருட்டில் ஈடுபட்டவர்கைளை கண்டுபிடித்து நகைகளை மீட்ட தனிப்படை போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்