தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றன.
தூத்துக்குடி மாவட்ட வாலிபால் கழகம், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய மிக்கேல் வாலிபால் கழகம், மஹா சிமெண்ட் நிறுவனம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மாரிப்பாண்டி முன்னிலை வகித்தார். போட்டிகளை தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக உதவி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன. மாணவர் பிரிவில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தையும், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாம் இடத்தை யும், சாயர்புரம் போப் பள்ளி மற்றும் தூத்துக்குடி ஸ்பிக் மேல் நிலைப் பள்ளி அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களையும் பெற்றன.
மாணவியர் பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஏ மற்றும் பி அணியினர் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், கோவில்பட்டி களம் அணியினர் மூன்றாம் இடத்தையும், சாயர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தருவைகுளம் தூய மிக்கேல் கைப்பந்து கழக தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமலதாசன் முன்னிலை வகித்தார். மஹா சிமென்ட் நிறுவன அதிகாரிகள் பாஸ்கரன், அருளரசு, கைப்பந்து வீரர் மங்களா ஜெயபால், தொழில் அதிபர் கிங்ஸ்டன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிக்காந்த், முத்துராஜன், விஜயலெட்சுமி, தூய மிக்கேல் கைப்பந்து கழக உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், ஜெயப்பிரகாஷ் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago