திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஒரே கடையில் பணியாற்றும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக பெருமாநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் நித்யா முருகேசன் கூறும்போது, ‘‘பெருமாநல்லூர் பகுதியில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை. ‘வாட்ஸ்அப்’பில் வதந்திகளை பரப்புவோர் மீது சுகாதாரத் துறை துணை இயக்குநர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பெருந்தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் பெருமாநல்லூர் மளிகைக் கடை ஒன்றில், 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. தொற்று தொடர்பாக பொய்யான வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago