விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதை முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி, தென்காசி , விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உட்பட 15 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கிளை, வட்டம், வார்டு நிர்வாகிகள் தேர்தல் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் தேர்தல் நடைபெறுகிறது.
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 5 இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 9 இடங்களிலும், சிவகாசி தொகுதியில் 6 இடங்களிலும், விருதுநகர் தொகுதியில் 4 இடங்களிலும் இத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலை நடத்த நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்த விஜயபாஸ்கருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago