நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய - அதிமுக தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : திமுக கவுன்சிலர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருப்பதால் அதிமுக-வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் உறுப்பினர் வரிசையில் அமர வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டதால் நிலக்கோட்டை ஒன்றியக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் கூட்டம் அதன் தலைவர் ரெஜினாநாயகம் (அதிமுக), தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் அறிவுசின்னமாயன் (திமுக) பேசுகையில், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அதனால் இக்கூட்டத்துக்கு அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடாது, அவர் உறுப்பினர் வரிசையில் அமர வேண்டும், என்றார்.

இதையடுத்து திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்குப் பதில்அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், நம்பிக்கை இல்லா தீர்மானம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. தீர்மானம் நிறைவேறும் வரை அவர்தான் தலைவர், என்றார்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்காதது குறித்து கவுன்சிலர் ராஜதுரை (திமுக) கேள்வி எழுப்பினார். அனைத்துத் துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசவே, இது சிறப்புக் கூட்டம் என்பதால் தீர்மானம் குறித்து மட்டும் பேச வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கவுன்சிலர்களை கேட்டுக்கொண்டார். ஊராட்சி ஒன்றிய மேலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்