மனு கொடுக்க வந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆட்சியர் புத்தகங்களை வழங்கி அறிவுரை கூறினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போது, சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது கணவர் வெரசுபாண்டியை சக்கர நாற்காலியில் அழைத்துக்கொண்டு இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அதில், தனது கணவருக்கு மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியபோது, அவரது கை, கால்கள் செயல் இழந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தையும், குழந்தைகளையும் காப்பதாற்ற தான் பட்டாசு வேலைக்குச் செல்வதாகவும், தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, குழந்தைகளிடம் புத்தகங்களை பரிசாக வழங்கி அறிவுரை கூறினார். மேலும், கோரிக்கை மனு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago