நத்தம் அருகே ரெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஒன்றிய கவுன்சிலர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ஷேக் அப்துல்லா, ரெட்டியபட்டி ஊராட்சித் தலைவர் சாத்திபவுர் ஆகியார் முன்னிலை வகித்தனர்.
சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் முகாமைத் தொடங்கி வைத்தார். வத்திபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காமேஸ்வரன் தலைமையிலான செவிலியர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் 1106 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 98 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் செல்வம் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago