நத்தம் அருகே வேம்பரளி கிராமத்தில் இருசக்கர வாகனம், மொபைல் போன், டிவி ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேம்பரளி டோல்கேட் அருகே உள்ள பிரபு, சின்னத்தம்பி , சக்திவேல் ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த டிவி, மொபைல் போன்களை திருடினர். பின்னர் சின்னத்தம்பியின் இருசக்கர வாகனத்தையும் திருடிக்கொண்டு தப்பினர்.
சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட பிரபு, சக்திவேல் ஆகியோர் கூச்சலிட்டனர். உடனடியாக கிராம மக்கள் திரண்டு வந்து திருடர்களை விரட்டிப் பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார், இருவர் தப்பிவிட்டனர். பிடிபட்டவரிடம் கிராம மக்கள் விசாரித்ததில், அவர் மதுரை மாவட்டம் பூசாரிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வினோத் (25) எனத் தெரிய வந்தது. தன்னுடன் திருட்டில் ஈடுபட்டவர்கள் பட்டணத்தைச் சேர்ந்த அருள்முருகன், ஒத்தக்கடையைச் சேர்ந்த ரூபன் என வினோத் தெரிவித்தார்.
இதையடுத்து நத்தம் போலீஸாரிடம் வினோத்தை கிராம மக்கள் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago