சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - விசாரணையை முடிக்க அவகாசம் கேட்டு கீழமை நீதிமன்றம் மனு : அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை முடிக்க கால அவகாசம் கேட்ட வழக்கில், விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் போலீஸ் விசாரணைக்குப் பின் உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தற்போது சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள் பெர்சி, உறவினர்கள் தேசிங்குராஜா, ஜெயராஜ், பென்னிக்ஸ் நண்பர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் சாட்சியமளித்துள்ளனர். அடுத்த விசாரணை டிச.16-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா ஊரடங்கு காரணமாக விசாரணையை 6 மாதங்களில் முடிக்க முடியவில்லை. எனவே, விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 17-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE