ரூ.700-ஐ கடந்த வெண்பட்டுக் கூடு விலை தருமபுரியில் விவசாயிகள் மகிழ்ச்சி :

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங் காடியில் நேற்று பட்டுக்கூடுகளின் விலை ரூ.700-யைக் கடந்தது.

தருமபுரி நகரில் நான்கு ரோடு அருகே அரசு பட்டுக்கூடு அங்காடி உள்ளது. இங்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலான அனைத்து நாட்களிலும் ஏல முறை மூலம் பட்டுக்கூடு விற்பனை நடைபெறுகிறது. தொடர் மழைக் காலங்களில் ஏற்படும் நடைமுறை சிரமங்களால் இயல்பாகவே ஆண்டுதோறும் பட்டுக் கூடுகள் உற்பத்தி சரிவடையும்.

இதனால், விற்பனைக்கு வரும் கூடுகளின் அளவு குறைவதால் விலையில் ஏற்றம் ஏற்படும். அந்த வகையில், கடந்த சில வாரங்களாக தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் பட்டுக் கூடுகளுக்கான விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த 9.11.21 வரை கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.400-க்கும், ரூ.500-க்கும் இடைப்பட்ட நிலையில் கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது.

12.11.21 அன்று கிலோவுக் கான அதிகபட்ச விலை ரூ.560-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மறுநாளில் ரூ.604 ஆக உயர்ந்தது. பின்னர், கிலோவுக்கு ரூ.550 முதல் ரூ.695 வரை ஏற்ற, இறக்கங்களுடன் ஒவ்வொரு நாள் ஒரு விலை கிடைத்து வந்தது. இந்நிலையில், நேற்றைய ஏலத்தில் கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.705 கிடைத்துள்ளது. நேற்றைய ஏல விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 617.200 கிலோ (22 லாட்) வெண் பட்டுக் கூடுகளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோவுக்கு அதிக பட்ச விலையாக ரூ.705-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.376-ம், சராசரி விலையாக ரூ.596.38-ம் கிடைத்தது.

நேற்றைய பட்டுக் கூடுகள் ஏலத் தின் மூலம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 88-க்கு வர்த்தகம் நடந்தது. பட்டுக்கூடுகளுக்கான விலை ரூ.700-ஐ கடந்துள்ளதால் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE