குழித்துறையில் கழிவுநீர் ஓடை சீரமைப்புக்காக, திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 20 அடி நீளத்துக்கு தோண்டப்பட்ட குழி ஒரு மாதமாகியும் மூடப்படாததால் அப்பகுதியில் விபத்துகள் அதிகரித்துள்ளன.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்து நெரிசல்மிக் கது. தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களை இணைக்கும் இந்ததேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. குழித்துறையில் இச்சாலையின் ஓரமாக கழிவுநீர் ஓடையை சீரமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
சாலையோரம் தோண்டப்பட்ட குழிஇதுவரை மூடப்படவில்லை. அப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளை இக்குழி அச்சத்துக்கு உள்ளாக்குகிறது.
இதுபோல், சாலையோரம் நடந்துசெல்லும் பொதுமக்கள் பலரும் அந்த கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து காயம் அடைந்துள்ளனர். கழிவுநீர் ஓடை தோண்டப்பட்ட பிறகு சீரமைப்பு பணி நடக்கவேயில்லை. ஓடைக்காக தோண்டப்பட்ட மண் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து குவிந்து கிடக்கிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் அங்குள்ள மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடைக்குள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
குழித்துறை நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள், பொதுநல ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
குழித்துறையில் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கழிவுநீர் ஓடையை சீரமைக்க குமரி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago