கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் - கருப்பை நார்த்திசு கட்டிகளுக்கு இயற்கை சிகிச்சை :

By செய்திப்பிரிவு

பெண்களுக்கான கர்ப்பப்பை நார்த்திசு கட்டிகளை குணப்படுத்த, கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இன்றி இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கர்ப்பப்பை நார்த்திசு கட்டிகள், கர்ப்பப்பையின் தசைப்பகுதியில் ஏற்படக்கூடிய பெரிதும் தீங்கு விளைவிக்காத, அதாவது புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஆகும். 70 சதவீதம் பெண்கள் இக்கட்டிகளால் அவதிக்குள்ளாகின்றனர். மரபணு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறைகள் ஆகியவை, கர்ப்பப்பை நார்க்கட்டிகள் ஏற்படுதலுக்கு முக்கிய காரணங்கள். யூஎஸ்ஜி ஸ்கேன் பரிசோதனை மூலமே இக்கட்டிகள் உறுதி செய்யப்படும். இக்கட்டியின் தீவிரம், நோயாளியின் நிலையைப் பொறுத்து இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. `மையோமெக்டமி’ போன்று கட்டியை மட்டுமோ அல்லது `ஹிஸ்டரெக்டமி’ எனப்படும் கர்ப்பப்பையை முழுமையாகவோ அகற்றும் அறுவை சிகிச்சை முறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

ஆனால், அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கான ஒற்றை தீர்வாகாது. கட்டியின் ஆரம்ப நிலையில் சிறிதான அளவில் இருக்கும்போது குறிப்பிட்ட ஆயுர்வேத சிகிச்சை முறையை மேற்கொள்வதன் மூலம் கட்டியின் அடுத்தடுத்த வளர்ச்சியை குறைக்க வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவிலான கர்ப்பப்பை நார்த்திசு கட்டிகளுக்கு வஸ்தி போன்ற ஆயுர்வேத சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இக்கட்டிகள் முழுவதுமாக சரிசெய்யக்கூடியவை அல்ல என்பதே உண்மை. ஆனால், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துதல் வேண்டும்.

இதுகுறித்த விளக்கங்கள் தேவைப்படுவோர், நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பெண்கள் மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவை அணுகலாம். இத்தகவலை, கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்