திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் திண்டுக்கல் சாலையுடன் இணையவுள்ள அரை வட்ட சுற்றுச்சாலையில் ஆண்டுக்கணக்கில் கொட்டப்பட்டு வரும் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் கரூர் புறவழிச் சாலையில் உள்ள திண்டுக்கரை முதல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேவேளையில், பஞ்சப்பூர் முதல் திண்டுக்கரை வரையிலான பணிகள் பல்வேறு காரணங்களால் தேக்கமடைந்துள்ளன.
இந்தச் சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் மேம்பாலம் வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் பெரிய கான்கிரீட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த சுவரையொட்டி திண்டுக்கல் சாலையை நோக்கி அமையவுள்ள சாலை மேடாக உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இருக்காது. இதைப் பயன்படுத்தி அந்த மண் மேட்டில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதில், அதிகளவில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என குப்பை நிறைந்து கிடக்கிறது. இவை தவிர பல்வேறு கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டு குப்பை மேடாகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அரை வட்டச் சுற்றுச்சாலைக்காக அந்த சாலையில் கொட்டப்பட்டுள்ள சிறிய ஜல்லிக்கற்கள், எம்சாண்ட் மணல் ஆகியவை திருடப்பட்டு வருகிறது. இதனால், அந்தச் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் சாலை நோக்கி அமையவுள்ள புறவழிச் சாலையில் குப்பை கொட்டுவதையும், சாலைப் பணிக்காக நிரவப்பட்டுள்ள மணல் திருடுபோவதையும் தடுக்க தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதுடன், அந்தச் சாலையில் குவிந்துள்ள குப்பையை அப்புறப்படுத்தி, மருத்துவக் கழிவுகளை கொட்டி வருபவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago