திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு காத்திருப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் 11-வது வார்டு கணபதிநகர் கானக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பையில் ஒரு பகுதி, இந்த பாறைக்குழியில் மாநகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், திருமுருகன்பூண்டி நகராட்சி என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், திருப்பூர் அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈர்ப்பு காத்திருப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும், 36 குடியிருப்புப் பகுதிகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சிபகுதிகளில் சேகரமாகும் குப்பையில் சுமார் 300 டன் வரையிலான குப்பை, அம்மாபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. இதில் மருத்துவக் கழிவுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும்.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிறுத்த வேண்டும்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago