சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியதும் - பைலட் வருண்சிங்கை நேரில் பார்க்க வேண்டும் : விபத்தில் அவரை மீட்ட வியாபாரி விருப்பம்

By ஆர்.டி.சிவசங்கர்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பைலட் வருண்சிங் குணமடைந்ததும் நேரில் சந்திக்க வேண்டும் என அவரை மீட்ட வியாபாரி மூர்த்தி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட ஹெலிகாப்டர் பைலட் வருண் சிங்குக்கு பெங்களூரு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பைலட் வருண்சிங்கை பள்ளத்தாக்கில் இருந்து மீட்ட நஞ்சப்பசத்திரத்தைச் சேர்ந்த வியாபாரி மூர்த்தி கூறியதாவது: கடந்த 8-ம் தேதி மதியம் தேயிலை எஸ்டேட் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததாக அப்பகுதி மக்கள் எனக்கு தொலைபேசியில் தகவல் அளித்தனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்துவிட்டு நண்பர்களோடு சம்பவ இடத்துக்குச் சென்றேன். அப்போது ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

கிராம மக்கள் உதவியுடன் நீர் ஊற்றி நெருப்பை அணைக்கமுயன்றோம். தீ வேகமாக பரவியதால் அதில் இருந்தவர்களை மீட்க முடியவில்லை. எனினும் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் யாரேனும் உள்ளார்களா என பார்த்தபோது, அங்கிருந்து ‘ஹெல்ப் மீ’ என குரல் ஒலித்தது. அந்த திசையை நோக்கி நண்பர்களுடன் சென்றேன். அப்போது உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் அருகே உயிருடன் இருந்த மற்றொருவரை மீட்டு மேலே கொண்டு வரும்போது ‘தேங்க்ஸ்’ என்றார். அவரை, ராணுவத்தினர் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.

பின்னர், அவர்தான் வருண் சிங் எனத் தெரிய வந்தது. தற்போது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நலமுடன் அவர் திரும்பிவர வேண்டும். குணமடைந்து வீடு திரும்பினால், எங்கிருந்தாலும் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்