காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,866 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதோடு, இதற்காக ரூ.67.08 கோடி இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய வட்டாரநீதிமன்றங்களில் நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருவள்ளூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எஸ்.செல்வசுந்தரி தொடங்கி வைத்தார். இதில், மொத்தம் 4,986 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.47.48 கோடிஇழப்பீட்டுத் தொகை வழங்கவும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் நீதிபதி கோ.சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ரவி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆர்.உமா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேலாராஸ், கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் வி.ராதிகா, கே.கமலா மற்றும் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், மாற்றுமுறை தீர்வு மைய வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தலைமையில், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் மீனாட்சி, பிரதம சார்பு நீதிபதி அனுஷா, மகளிர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா, போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி மற்றும் பல நீதிபதிகள் முன்னிலையில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
ஒருங்கிணைந்த நீதித்துறை மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து நீதிமன்றங்களில் உள்ள 5,421 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இதில் 1,880 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.19 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரத்து 172 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின் பேரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago