சிவகாசியில் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்கள் தொடங்க வேண்டும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், சிறப்புத் தொழில் கடன் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகப் பொது மேலாளர் கிருபாகரன் வரவேற்றார். ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.
இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொழில் முனைவோர் 5 பேருக்கு ரூ.1.09 கோடி கடனுக்கான காசோலைகளையும், 8 பேருக்கு ரூ.6.80 கோடிக்கான கடன் வழங்க அனுமதிக்கான ஆணைகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், பல தொழில் முனைவோர் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும், தமிழக அரசும் செய்து தரும் என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தொழில் தொடங்க நிலத்துக்கான விலையை தமிழக அரசு குறைத்துள்ளது. பட்டம்புதூர் சிப்காட்டில் மெகா ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ஜவுளிப் பூங்காவும் வர உள்ளது. சிவகாசியில் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்களை தொடங்க வேண்டும்.
கடந்த 6 மாதங்களில் இதுவரை ரூ.60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ், விருதுநகர் விடீட்சியா செயலர் குருசாமி, மருத்துவர் ரத்தினவேல், இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் தலைவர் ஜலபதி, பெல் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் ராஜாசிங், மதுரை தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் தியாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 528 பேருக்கு ரூ.1.47 கோடியிலான நலத்திட்ட உதவிகளையும், சாத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் 434 பேருக்கு ரூ.42.92 லட்சம் மதிப்பிலான உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சீனிவாசன் (விருதுநகர்), ரகுராமன் (சாத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago