சூளகிரியில் லாரி மீது கல்வீசி ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சூளகிரி அருகே ஓட்டுநரை தாக்கி, லாரி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய, ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வண்ணாரப் பேட்டை மேற்கு கிருஷ்ணப்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (48). கன்டெய்னர் லாரி ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரியை ஓட்டி வந்தார்.

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் லாரி வந்தபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்துக்கு வழிவிடாமல் சிறிது தூரம் சண்முகம் லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் லாரியை வழிமறித்து பேருந்தை குறுக்கே நிறுத்தினார்.மேலும், ஆம்னி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரும் சேர்ந்து சண்முகத்தை தாக்கி, கற்களை வீசி லாரி கண்ணாடிகளை சேதப்படுத்தினர். இந்நிகழ்வுகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்ததில் வைரலானது.

இதுதொடர்பாக சண்முகம் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணம் அடுத்த வளிஹரஅள்ளியைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிக்கேகவுடா (24) மற்றும் பெங்களுரு சிக்கஜாலா வணினஹள்ளியைச் சேர்ந்த உதவியாளர் பிரசாத் (25) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்