தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருபர் ஆணையத்தின் 33-வது கட்ட விசாரணை இன்று (டிச.13) தொடங்குகிறது. இந்த விசாரணையில், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் 18 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கெனவே ஆணையத்தால் 32 கட்ட விசாரணை முடிவடைந் துள்ளது. 1,016 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 1,342 ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆணையத்தின் 33-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று (டிச.13) தொடங்குகிறது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. உயர் அதிகாரிகள் வசதிக்காக இன்று முதல் வரும் 18-ம் தேதி வரையும், பின்னர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையும் 2 கட்டமாக விசாரணை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago