தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள் இயக்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. .
பரதவர் குல மன்னர் பாண்டியாபதியின் 268-வது பிறந்தநாள் விழா, நெய்தல் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை தூத்துக்குடி ஸ்னோ ஹால் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பழவேற்காடு முதல் நீரோடி வரையுள்ள 40 நெய்தல் எழுத்தாளர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு உலக திருக்குறள் தகவல் மைய தலைவர் பா.வளன் அரசு தலைமை வகித்து, நெய்தல் இலக்கியம் எனும் தலைப்பில் பேசினார். கலாபன் வாஸ், முட்டம் வால்ட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி பேராசிரியர் அசோகா சுப்பிரமணியம் 'நெய்தல் நிலத்தில் வாசிப்பும் படைப்பும்' என்ற தலைப்பில் பேசினார். பூம்புகார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நா.சாந்தகுமாரி தமிழரசன் 'நெய்தல் பெண் எழுத்தாளர்களும் சிந்தனைகளும்' எனும் தலைப்பின் பேசினார்.
இயக்கத்தின் ஆண்டறிக்கையை பேராசிரியை பாத்திமா பாபு வாசித்தார். தீர்மானங்களை வினோஜி படித்தார்.
'தூத்துக்குடி கடற்கரைச் சாலைக்குப் பாண்டியாபதி சாலை என பெயரிட வேண்டும். ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு அவரது சிலை இருக்கும் இடத்திலேயே மணிமண்டபம் கட்ட வேண்டும். அப்பகுதி சாலைக்கு குரூஸ் பர்னாந்து சாலை எனப் பெயரிட வேண்டும். புதிய மாநகராட்சி கட்டிடத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். வலம்புரி ஜானின் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரிகாலன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago