வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சிம்மகுளம் திறக்கப்பட்டது.
கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக சிம்மகுளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின் பற்றப்படுவதால் இந்த ஆண்டும் சிம்மகுளத்தில் நீராட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், 3-வது ஆண்டாக பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சிம்மகுளம் திறப்பு நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், மார்கபந்தீஸ்வரர் மற்றும் மரக தாம்பிகைக்கு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் அனுமதிக் கப்படவில்லை. நள்ளிரவு 1 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் நேற்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு 180 பக்தர்கள் என்ற அடிப்படையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர்.
சிம்மகுளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் சுவாமி தரிசனத்துக்கு செல்லும் வழியில் குளத்தில் உள்ள தண்ணீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கடை ஞாயிறு விழாவையொட்டி கோயிலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago