உடுமலை நகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட - வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு :

By எம்.நாகராஜன்

உடுமலை நகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி, கடந்த 10 ஆண்டுகளில் 14,068 வாக்காளர்கள் அதிகரித்துள்ளது, தெரியவந்துள்ளது. பல்வேறு குளறுபடிகளுடன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உடுமலை நகராட்சி சார்பில்கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 57,482- ஆக உள்ளது. இதில் ஆண்கள்27,901, பெண்கள் 29,573, மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் அடங்குவர். மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 33. மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 64-ஆக உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தலுக்குப்பின் நடைபெற்ற தொகுதி மறு சீராய்வின்போது சிலவார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகவும், குறைவாகவும் இடம்பெற்றுள்ளதாக அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 42,414. இதில் ஆண்கள் 21,582, பெண்கள்21,832. அப்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 51. வார்டுகள் 33. கடந்த 10 ஆண்டுகளில் 14,068 பேர் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர். அப்போது குறைந்தபட்சமாக 8-வது வார்டில் 675வாக்காளர்களும், அதிகபட்சமாக31-வது வார்டில் 2,339 வாக்காளர்களும் இடம்பெற்றிருந்தனர். இது தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்படி குறைந்தபட்சமாக 20-வது வார்டில் 828 வாக்காளர்களும், அதிகபட்சமாக 15-வது வார்டில் 3,437 வாக்காளர்களும், கூடுதலாக 13 வாக்குச்சாவடிகளும் இடம்பெற்றுள்ளன,’’ என்றனர்.

இதுகுறித்து திமுக நகரச் செயலாளர் மு.மத்தினிடம் கேட்டபோது,‘‘அதிமுக ஆட்சியின்போது வார்டுகள் மறுவரை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. 33வார்டுகளிலும் சேர்த்து 57,000 என்று கணக்கிட்டால்கூட ஒருவார்டுக்கு தலா 1,700 வாக்காளர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. எனவே மீண்டும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்,’’ என்றார்.

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பாலதண்டபாணி கூறும்போது, ‘நான், முன்னர் போட்டியிட்ட 22-வது வார்டில் 2011-ல் 1,238 பேர் மட்டுமேவாக்காளர்கள். தற்போது 2,100-ஆக உள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,’’ என்றார்.

அதிமுக நகர பேரவை துணைச் செயலாளர் எம்.ஹீரா கூறும்போது, ‘‘இது குளறுபடியான வாக்காளர் பட்டியல், எந்த வார்டிலும் சராசரி எண்ணிக்கையில் வாக்காளர்கள் இல்லை. உடுமலை நகராட்சி வார்டுகள் மீண்டும் மறுசீரமைப்பு செய்வது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்