கோவை, திருப்பூர் மக்கள் நீதிமன்றங்களில் 3918 வழக்குகளுக்கு தீர்வு :

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 3,918வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு,முறையீட்டாளர்களுக்கு ரூ.60 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், கோவைஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார்.

சிறு குற்றம், காசோலை, வாகன விபத்து, நில ஆர்ஜிதம் மற்றும் தொழிலாளர் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,760 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதன்மூலமாக முறையீட்டாளர்களுக்கு தீர்வுத் தொகையாக ரூ.9.33 கோடி பெற்றுத்தரப்பட்டது. மேலும், சில குடும்பநல வழக்குகளில் சமரச பேச்சுவார்த்தையின் பலனாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவெடுத்து தீர்வு காணப்பட்டது. இதேபோல, வழக்குகளை மாற்றுமுறையில் தீர்வு காணவும், இலவசசட்ட உதவி பெறவும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக் குழுவை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் கோவை மாவட்ட குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலு தலைமையில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

பொள்ளாச்சி வட்ட சட்ட பணிக் குழுத் தலைவர் பாலமுருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்லையா, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

விசாரணைக்கு 1,471 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 46 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.2 கோடியே 92 லட்சத்து 61 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சார்பு நீதிமன்ற வளாகங்களில் 20 அமர்வுகளாக லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்வு) நடந்தது. மாவட்ட நீதிமன்றவளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குமுதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் தலைமைவகித்தார். 4,140 வழக்குகள்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2,112 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.48 கோடி.

மங்கலம் அருகே இச்சிபட்டியை சேர்ந்த பரமசிவம் (43) என்பவர் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் ரூ. 65 லட்சம் சமரசம் செய்யப்பட்டு, நேற்று அவரது மனைவி லோகசெல்வியிடம் அதற்கான காசோலையை முதன்மை மாவட்டநீதிபதி ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் வழங்கினார்.

இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராமசாமி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி நாகராஜன், முதன்மை சார்பு நீதிபதி சந்திரசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிபிரபா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி விக்னேஷ் மது, குற்றவியல்நீதித்துறை நடுவர்கள் கார்த்திகேயன், ராமநாதன், நீதிபதி உதய சூர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்