வேப்பனப்பள்ளி அருகே கயிறு உதவியுடன் ஆற்றை கடக்கும் கிராம மக்கள் : தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தல்

By எஸ்.கே.ரமேஷ்

வேப்பனப்பள்ளி அருகே மார்பளவு உயரத்தில் ஓடும் தண்ணீரில், நந்தகுண்டப்பள்ளியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆபத்தாக கடந்து சென்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட் சிக்கு உட்பட்ட கிராமம் நந்தகுண்டப்பள்ளி. இக்கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர்கள் கூலி வேலைக்காக, கதிரிப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் செல்கின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே மார்கண்டேயன் நதியின் கிளை ஆறு செல்கிறது.

இதனால் மழைக்காலங்களில், இக்கிராம மக்கள் கதிரிப்பள்ளி பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் சுமார் 12 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆற்றின் குறுக்கே சென்று வர தற்காலிக சாலை அமைத்தனர். அவ்வழியே தினமும் கடைகளுக்கும், வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குச் சென்று வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்காலிக சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் ஆற்றைக் கடந்து வர முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும், ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கயிறுக் கட்டி அவ்வழியே மார்பளவு தண்ணீரில் ரேஷன் பொருட்களுடன் அரிசி மூட்டைகளை தலைமேல் வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க கதிரிப்பள்ளியில் உள்ள நியாய விலைக்கடைக்கு ஆற்றினை கடந்து சென்றால் ஒரு கி.மீ தூரம் தான் இருக்கும். தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் வேப்பனப்பள்ளி, நாச்சிக்குப்பம் வழியாக கதிரிப்பள்ளி கிராமத்திற்கு செல்ல 12 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஆற்றின் கரைகளில் கயிறுக் கட்டி அதன் உதவியுடன் கடந்து சென்று வருகிறோம். ஒரு மாதத்திற்கும் மேல் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, ஆற்றின் குறுக்கே சிறிய தரைப்பாலம் அமைத்து தர தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்