ஈரோடு அருகே தனியார் ஆலையில் - குளோரின் வாயு கசிவால் உரிமையாளர் உயிரிழப்பு: 5 பேருக்கு சிகிச்சை :

By செய்திப்பிரிவு

சித்தோட்டில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட குளோரின் வாயுக் கசிவால் உரிமையாளர் உயிரிழந்தார். தொழிலாளர்கள் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (45). சித்தோட்டில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 900 கிலோ குளோரின் வாயு மிகப்பெரிய கலனில் சேமித்து வைக்கப்பட்டு, அதிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தேவையான அளவில் சிறிய கலன்களுக்கு மாற்றப்படுவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் பெரிய கலனிலிருந்து சிறிய கலனுக்கு குளோரின் மாற்றும் போது எதிர்பாராதவிதமாக கசிவு ஏற்பட்டது. அப்போது கொள்கலனில் இருந்த குளோரின் வாயு கசிந்து நிறுவனம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த ஈரோடு, சித்தோடு, பவானி தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் மயக்க மடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று வாயு கசிவை குறைத்தனர். இந்த விபத்தில் கெமிக்கல் நிறுவன உரிமையாளர் தாமோதரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், 5 பேருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவ இடத்தை பார்வையிட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்