மாமல்லபுரத்தில் திடீரென அகற்றப்பட்ட நடைபாதை சிறு கடைகளை மீண்டும் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட சாலையோர சிறுகடை வியாபாரிகள் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது சில வரையறைகளோடு கடை நடத்த அனுமதி தந்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அர்ஜுனன் தபசு அருகில் கடைவைத்து வியாபாரம் செய்துகொள்ள அனுமதி வழங்கியிருந்த நிலையில் சில வியாபாரிகள் அப்பகுதியில் கடை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வருவாய்த் துறையின் சார்பில் முன்னறிவிப்பு இல்லாமல் அர்ஜுனன்தபசு அருகில் உள்ள 16 சாலையோரகடைகளை அகற்றியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவியாபாரிகள் மாவட்ட நிர்வாகம்ஒதுக்கியுள்ள இடத்தில்தான் கடை வைத்துள்ளோம் என தெரிவித்தும் வருவாய்த் துறையினர் கடைகளை அகற்றிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் காஞ்சிபுரம் மாவட்ட முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.யோபு ராஜ், சிபிஎம் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் செங்கல்பட்டு கோட்டாட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் வைக்கப்பட்ட கடைகளை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து, அகற்றப்பட்ட கடைகளை அதே இடத்தில் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago