புட்லூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் : பயணிகளின் வசதிக்காக அமைக்கப்படும் என ரயில்வே தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் மற்றும் பாலாஜி நகர் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே மண்டல மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “புட்லூர் ரயில்நிலையத்தில் பொதுமக்கள் ரயில்பாதையைக் கடந்து செல்வதற்காக, புறநகர் ரயில்கள் செல்லும் பாதை மீது மட்டும் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவுரயில்கள் செல்லும் பாதையின் மீது நடைமேம்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் தண்டவாளத்தை மிகவும் ஆபத்தானமுறையில் கடந்து செல்கின்றனர்.எனவே, அங்கேயும் ஒரு நடை மேம்பாலத்தை அமைக்க வேண்டும்.

புட்லூர் ரயில் நிலையத்தில் கணினி மூலம் பயணச்சீட்டை வழங்க வேண்டும். அதேபோல், ரிட்டர்ன் டிக்கெட் வழங்கும் சேவையையும் தொடங்க வேண்டும்.

புட்லூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் செல்லும் பாதை அருகே நடைமேடை அமைக்க வேண்டும். மேலும், ரயில் நிலையநடைமேடைகளில் சிறிய வகையிலான மேற்கூரைகளை அகற்றி விட்டு பெரிய வகையிலான மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.

ரயில் நிலைய வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரயில்களின் பயண நேர அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவற்றை பொருத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், “புட்லூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் நடைமேம்பாலம், பெரிய வகையிலான மேற்கூரைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

கணினி மூலமாக டிக்கெட் வழங்கும் கோரிக்கை, ரயில் பயண நேர அறிவிப்பு பலகை பொருத்தும் கோரிக்கை ஆகியவை கருத்தில்கொள்ளப்பட்டுள்ளன. விரைவுரயில்பாதையை ஒட்டி நடைமேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்