கீரனூர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.08 கோடி நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக வங்கி செயலாளர் உட்பட 2 பேர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலும் ஆய்வு செய்யப்பட்டது.
நகைக்கடனுக்காக அடகு வைக்கப்பட்ட கணக்குப்படி, ரூ.3.63 கோடி மதிப்பில் 934 பொட்டலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில், 823 பொட்டலங்கள் மட்டுமே வங்கியின் நகைப்பெட்டகத்தில் இருந்தன. ரூ.1.08 கோடி மதிப்பிலான நகைகள் கொண்ட 102 பொட்டலங்கள் பெட்டகங்களில் இல்லை.
இதையறிந்த மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, ஆய்வறிக்கையை பெற்றுக்கொண்டதோடு, பெட்ட கத்தின் சாவியையும் பெற்றார். இதைத்தொடர்ந்து, 102 பொட்டலங்கள் யார், யார் பெயரில் வைக்கப்பட்டன என்பது குறித்து வங்கி செயலாளர் பி.நீலகண்டன், மேற்பார்வையாளர் என்.சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் என்.கனகவேலு ஆகியோரிடம் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், நகைகள் வைக்காமலே ரூ.1.08 கோடி முறைகேடு செய்தது தெரியவந்தது. பின்னர், அந்த தொகையை 3 பேரிடம் இருந்தும் வசூலிக்கும் பணியும் நடைபெற்றது. மோசடியில் ஈடுபட்ட நீலகண்டன், என்.சக்திவேல் ஆகியோர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், நகை மதிப்பீட்டாளர் என்.கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர்கள் 3 பேர் மீதும் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago