தஞ்சாவூரில் உள்ள ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ஏறத்தாழ 115 ஆண்டுகள் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர், இடநெருக்கடி காரணமாக தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே 61.42 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, 2015-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து, பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் தகவல் பலகைகள், வண்ண மீன்கள் கண்காட்சிக் கூடம் போன்றவை அமைக்கப்பட்டன.
தொடர்ந்து, இந்தக் கட்டிடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.9 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல், பாரம்பரிய முறைப்படி புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தக் கட்டிடத்தின் வெளியே தரைத்தளம் முழுவதும் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தின் சிறப்புகளை திரையிடுவதற்காக 5டி திரையரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தக் கட்டிடம் ஆட்சியர் அலுவலகமாக இருந்தபோது 'ரெட்போர்ட்' முறையில் செங்கல் வெளியே தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில், இதில் சிமென்ட் கலவைகளைக் கொண்டு பூசியதால், கட்டிடம் வெண்மை நிறமாக மாறியது. இதையடுத்து, இக்கட்டிடத்தை பழமை மாறாமல் மீண்டும் 'ரெட்போர்ட்' தோற்றத்துக்கு புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, புதிதாக பூசப்பட்ட சிமென்ட் பூச்சுகளை அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், பழமை மாறாமல் மழைநீர் உள்ளே புகாதவாறு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுண்ணாம்பு சாந்து பூச்சுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago